மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மடப்புரம் பத்ரகாளியம்மன்

திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் மற்ற நாட்களில் அபிஷேகம் மற்றம் தீபாராதனைகளும் நடைபெறும்.

தமிழ், ஆங்கில வருடபிறப்பு மற்றும் ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதேபோல் ஒவ்வொரு மாதம் வரும் பவுர்ணமி அன்று பத்ரகாளி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனபொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்படும். நேற்று ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்திருந்தனர்.

ஆடி வெள்ளிக்கிழமை

பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. முன்னதாக மடப்புரம் செல்லும் விலக்கு ஆர்ச் முன்பே ஆட்டோ மற்றும் கார் போன்ற அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு பக்தர்கள் இறங்கி நடந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர். இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் நடந்தே சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலின் உள்ளே கட்டண தரிசனம், இலவச தரிசனம் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து அம்மனை வழிபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் மானாமதுரை துணை சூப்பிரண்டு கண்ணன் அறிவுறுத்தலின்படி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.


Next Story