பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை

பெருமாள் பக்தர்கள் விரதம்

புரட்டாசி மாதம் வைண கடவுளான பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் பெருமாள் பக்தர்கள் பலர் விரதம் இருந்து வழிபாடு நடத்துவது வழக்கம். அசைவ உணவை தவிர்த்து சைவ உணவு மட்டும் சாப்பிடுவார்கள். இதேபோல பொதுவாக சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்குரிய நாளாக கருதப்படுகிற நிலையில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை மிகவும் விசேஷமாகும். இந்நாளில் பக்தர்கள் பலர் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த 18-ந் தேதி பிறந்த நிலையில் பெருமாள் பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். இந்த நிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு அபிஷேகம்

புதுக்கோட்டையில் கீழ 3-ம் வீதியில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.

மேலும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை அளித்தார். கருட வாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெற்றது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே குவிந்தனர். பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க தடுப்பு கம்புகள் அமைத்து முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன் வழியாக பக்தர்கள் வரிசையாக அனுமதிக்கப்பட்டனர். காலையில் பக்தர்கள் கூட்டம் கோவிலின் வெளிப்புறப்பகுதியிலும் நீண்டது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல நகரப்பகுதியில் உள்ள மற்ற பெருமாள் கோவில்களிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கீரனூர்

கீரனூர் அருகே உள்ள குளத்தூர் வரதராஜ பெருமாள், மலையடிப்பட்டி கண் திறந்த பெருமாள், களமாவூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story