சாமிநாதபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்ப படையல் நிகழ்ச்சி குழந்தை வரம் வேண்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்


சாமிநாதபுரத்தில் உள்ள  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்ப படையல் நிகழ்ச்சி  குழந்தை வரம் வேண்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
x

சேலம் சாமிநாதபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்ப படையல் நிகழ்ச்சி நடந்தது. இதில் குழந்தை வரம் வேண்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

சேலம்

சேலம், நவ.24-

சேலம் சாமிநாதபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்ப படையல் நிகழ்ச்சி நடந்தது. இதில் குழந்தை வரம் வேண்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

கும்ப படையல்

சேலம் சாமிநாதபுரம் வண்டிப்பேட்டை பகுதியில் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை நாளில் கும்ப படையல் சாதத்தை வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் நோய் நொடிகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த நிலையில் நேற்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சமயபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரசாதம்

தொடர்ந்து அமாவாசையையொட்டி கும்ப படையல் நிகழ்ச்சி நடந்தது. அதாவது அம்மனுக்கு காய்கறிகள், சிறுதானியங்கள், கீரை வகைகளை சமைத்து, சாதத்துடன் கலந்து அம்மனுக்கு படைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த கும்ப படையலை வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.

கும்ப படையலை வாங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் அம்மனுக்கு பூஜை செய்யப்பட்ட கும்ப படையல் சாதத்தை பிரசாதமாக வாங்கி உண்டனர். இதனிடையே பக்தர்களின் கூட்டம் அதிகமானது. இதனால் கூடுதலாக 300 கிலோவுக்கு உணவு சமைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொட்டில்

மேலும் நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து குழந்தை வரம் வேண்டி கோவிலில் தொட்டில் பொம்மை கட்டினர். திருமண வரம் வேண்டி ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் வைத்து முடித்து, அதனை கோவிலில் உள்ள அம்மன் சூலாயுதத்தில் கட்டி பக்தர்கள் வேண்டிக்கொண்டனர்.

பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் தொட்டில், பொம்மை, மஞ்சள் துணி உள்பட பல்வேறு பூஜை பொருட்கள் விற்பனைக்காக கடைகள் போடப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story