கோவில்களில் குவிந்த பக்தர்கள்
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
தமிழ் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி காலை 7 மணியளவில் சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது. இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில், சுவாமி காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் மண்டபத்தில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் காலை 7 மணியளவில் சுவாமிக்கு திருமஞ்சனம், சொர்ண அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து லட்சார்ச்சனையும், மாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுவாமி சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
அய்யப்பன் கோவில்
திண்டுக்கல் மலையடிவாரம் அய்யப்பன் கோவிலில் நேற்று காலை 4.30 மணியளவில் கணபதி ஹோமம், 6 மணி அளவில் சுவாமிக்கு, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்பட அனைத்து வகை பழங்களை கொண்டு விசுக்கனி அலங்காரம் நடைபெற்றது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்களுக்கு பிஸ்கட், பால், வாழைப்பழம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் அம்மனின் தங்கத்தேரோட்டம், சகடை வாகனத்தில் வீதிஉலா நடந்தது.
திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அதன்பிறகு ஊஞ்சல் உற்சவமும், மூலவர் அம்மனுக்கு சமயபுரம் மாரியம்மன் அலங்காரமும் நடைபெற்றது.
இதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், எம்.வி.எம்.நகர் தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கந்தக்கோட்டம் முருகன் கோவில், வடக்கு மேட்டுராஜக்காபட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒருவருக்கொருவர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
பாதாள செம்பு முருகன்
ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் இளம் பச்சைக்கற்களாலான ஆடை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பாதாள செம்பு முருகன் அருள்பாலித்தார். நேற்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கருங்காலி மாலைகளை வாங்கி சாமிக்கு அணிவித்து வழிப்பட்டனர். மேலும் பள்ளி மாணவர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அறிவாதீனம் சுவாமிகள் முருகனின் படங்களை வழங்கினார். அறிவாதீனம் சுவாமிகள் பக்தர்கள் அனைவருக்கும் மூலிகை திருநீறு வழங்கி அருளாசி கூறினார். பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை அன்னதானம் நடைபெற்றது.
நத்தம்
நத்தம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில், பகவதி அம்மன், காளியம்மன், ராக்காச்சி அம்மன், தில்லை காளியம்மன் கோவில்களிலும், திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். மேலும் திருமலைக்கேணி தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடினர்.
சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டியில் உள்ள கதிர்நரசிங்க பெருமாள் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் நரசிம்மன், ராஜசிம்மன் ஆகியோர் செய்திருந்தனர்.
கொடைக்கானல்
கொடைக்கானல் அண்ணா சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சுவாமிகளுக்கு தங்க கவசம் புதிதாக அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கோவில் கமிட்டி தலைவரும், முன்னாள் நகராட்சி தலைவருமான வி.எஸ்.கோவிந்தன் தலைமை தாங்கினார். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சிவகாமி, அவரது கணவர் சரவணன் மற்றும் பொதுமக்கள் சார்பில் சுமார் ரூ.5 லட்ச மதிப்பீட்டில் சுவாமிகளுக்கு தங்க கவசம் வழங்கப்பட்டது.
இதேபோல் குறிஞ்சி ஆண்டவர் கோவில், ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோவில், டோபிகானல் பெரிய காளியம்மன் கோவில், டெப்போ காளியம்மன் கோவில், அண்ணா நகர் சின்ன மாரியம்மன் கோவில் உள்பட கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.