பேரூர் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்


பேரூர் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 18 July 2023 1:30 AM IST (Updated: 18 July 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பேரூர் படித்துறையில் பக்தர்கள் குவிந்தனர்.

கோயம்புத்தூர்


பேரூர்


ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பேரூர் படித்துறையில் பக்தர்கள் குவிந்தனர்.


ஆடி அமாவாசை


கோவை மாவட்டம் பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே, நொய்யல் ஆற்றங்கரையில் தர்ப்பண மண்டபம் உள்ளது. இது காசிக்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்பெற்றதாக கூறப்படுகிறது.


ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு, நீராடிய பிறகு பட்டீஸ்வரரை வழிபட்டால் முன்னோரின் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம். இதனால் அன்றைய தினங்களில் தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பிறமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பேரூருக்கு வந்து தர்ப்பணம் கொடுத்து செல்வார்கள்.


முன்னோர்களுக்கு தர்ப்பணம்


இந்த நிலையில் ஆடி அமாவாசையான நேற்று காலை முதலே கோவை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், நீலகிரி மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பேரூர் படித்துறையில் குவிய தொடங்கினர். தொடர்ந்து அவர்கள் தர்ப்பண மண்டபத்திற்கு சென்று முன்னோர்களுக்காக வழிபாடு நடத்தினர். அப்போது முன்னோர்களின் பெயரை சொல்லி திதி கொடுத்தனர்.


தொடர்ந்து எள் உருண்டை, பச்சரிசி சாதம், காய்கறிகள் உள்ளிட்டவற்றை படைத்து, அவர்களை நினைத்து மனமுருகினர். மேலும், அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து, பூைஜ செய்து வழிபட்டனர்.


நீராட சிறப்பு வசதி


தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்கள் பேரூர் நொய்யல் ஆற்றில் நீராடுவது வழக்கம். ஆனால் தற்போது நொய்யல் ஆறு வறண்டு காட்சியளிக்கிறது. இதன் காரணமாக, பேரூர் பேரூராட்சி நிர்வாகம் பேரூர் படித்துறையில் பிரத்யேகமாக ஷவர் அமைக்கப்பட்டிருந்தது.


இதில் பக்தர்கள் நீராடி விட்டு, ஆற்று விநாயகரை வணங்கினர். பின்னர் அங்கு நின்ற மாடுகளுக்கு அகத்திக்கீரையும், வழியோரத்தில் அமர்ந்திருந்த சாதுக்களுக்கு அன்னதான பொட்டலமும் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று பட்டீசுவரர், பச்சை நாயகி அம்மனுக்கு நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.


முன்னேற்பாடுகள்


வழக்கமாக, ஆடி மாதத்தில் வரும் அமாவாசையில் பேரூர் படித்துறையில் பக்தர்கள் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதும். இந்த வருடம் 2 அமாவாசை வருவதாலும், 2-வது அமாவாசை தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும் நேற்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக, பக்தர்கள் வந்து தர்ப்பணம் கொடுப்பதும், போவதுமாக இருந்தனர்.


பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகம் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருந்தது. ஆடி அமாவாசையையொட்டி பேரூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் ஆங்காங்கே புதிதாக கடைகள் வைக்கப்பட்டிருந்தன.



Next Story