பக்தர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த இடம் தேடி அலையும் அவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த இடம் தேடி அலையும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக கடந்த சில மாதங்களாக இக்கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா பகுதியை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.
இக்கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் கார், வேன், டூரிஸ்ட் பஸ் போன்றவற்றில் வருகின்றனர். வழக்கமாக விழா நாட்களை தவிர்த்து கோவிலின் அம்மணி அம்மன் கோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் உள்ள வட, தென் ஒத்தவாடை தெருகளில் கார்கள் நிறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவில் சுற்றியுள்ள மாட வீதியில் பே கோபுரம் பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் பே கோபுரத்தெரு வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டு உள்ளது.
இடம் தேடி அலையும் அவலம்
பே கோபுரத்தெருவில் வாகனங்கள் செல்லாததால் மாட வீதியில் உள்ள தேரடி வீதி முதல் திருவூடல் தெரு வழியாக திருமஞ்சன கோபுர வீதி வரை அதிக அளவிலான போக்குவரத்து நெரிசல் காலை முதல் மாலை வரை ஏற்படுகிறது.
அதுவும் குறிப்பான விடுமுறை நாட்களை தவிர்த்து அலுவலக வேலை நாட்களில் போக்குவரத்து அதிகளவில் காணப்படுகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் முதல் அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் வரை இந்த சாலையை கடந்து செல்வதற்கு ஒரு வழியாகி விடுகின்றனர்.
இதற்கிடையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாட வீதி பகுதியில் ஆங்காங்கே போலீசார் திடீர், திடீரென பேரிகார்டுகள் வைத்து போக்குவரத்து மாற்றங்கள் செய்வதால் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பக்தர்கள் எங்கு வாகனங்களை நிறுத்தம் செய்வது என்று தெரியாமல் திகைத்து வாகனங்களை நிறுத்த இடம் தேடி அலையும் அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அடுக்குமாடி கார் நிறுத்தும் இடம்
இந்த கார் நிறுத்தும் வசதி என்பது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாகவே உள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு வளர்ந்த நகரங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தும் இடம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் அடுக்குமாடி கார் நிறுத்தும் இடம் செய்து கொடுக்கப்பட்டால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றப்பட்டது. அந்த இடத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் கோவில் ராஜகோபுரம் அருகில் காலி இடம் உள்ளது. மேலும் சன்னதி தெருவில் பயன்பாட்டில் இல்லாத பழைய நகராட்சி அலுவலக கட்டிடம் உள்ளது.
இது போன்று பயன்பாட்டில் இல்லாத இடங்களில் அடுக்குமாடி கார் நிறுத்தும் இடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்கள் கோரிக்கை
அதற்கு முன்னதாக தற்சமயம் கோவிலுக்கு வரும் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் அலையும் பக்தர்களின் அவலநிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கோவிலுக்கு அருகாமையிலோ, கிரிவலப்பாதையிலோ கார் நிறுத்த இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும் கார் நிறுத்தும் இடம் குறித்த அறிவிப்பு பலகைகளை திருவண்ணாமலை நகரில் உள்ள முக்கிய சாலைகளில் பொதுமக்களின் பார்வையில் படும் வகையில் வைக்க வேண்டும் என்றும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.