சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்
திண்டுக்கல்லில் பக்தி பரவசத்துடன் சரண கோஷம் முழங்க, சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்து பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
கார்த்திகை மாதம்
தமிழ் மாதங்களில் கார்த்திகை, ஆன்மிகத்துடன் அதிக தொடர்பு கொண்டது. இந்த மாதத்தில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். எனவே இறை வழிபாட்டுக்கு உகந்த மாதங்களில் கார்த்திகை முக்கியமானது. இதனால் மன கஷ்டத்தை போக்கும் மாதம் கார்த்திகை என்றும் கூறுவார்கள்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்று இருந்தாலும் கார்த்திகை மாதம் என்றதும், அனைவரின் நினைவுக்கும் வருவது சபரிமலை அய்யப்ப சாமி வழிபாடு தான். கார்த்திகை மாதம் பிறந்ததும் முதல் நாளிலேயே பக்தர்கள் மாலை அணிந்து அய்யப்ப சாமிக்கு விரதத்தை தொடங்குவர். இத்தகைய சிறப்பு மிக்க கார்த்திகை மாதம் நேற்று பிறந்தது.
அய்யப்ப பக்தர்கள் விரதம்
இதனால் உலகம் முழுவதும் உள்ள அய்யப்ப பக்தர்கள் பக்தி பரவசத்தோடு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அதன்படி திண்டுக்கல் மலையடிவாரம் அய்யப்பன் கோவிலில் கார்த்திகை முதல் நாளையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அய்யப்ப சாமிக்கு பூஜைகள் நடந்தன.
அப்போது அதிகாலையில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குளித்து, கருப்பு மற்றும் பச்சை நிற ஆடைகளை அணிந்து வந்தனர். மேலும் அய்யப்ப சாமியை தரிசனம் செய்தனர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் குருசாமிகள் முன்பு முழங்காலிட்டு மனமுருக வேண்டி பக்தர்கள் நின்றனர். அவர்களுக்கு குருசாமிகள் துளசி மணி மாலை அணிவித்தனர். ஒரே நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டதால் நீண்டவரிசை காணப்பட்டது. இதில் முதல்முறை மாலை அணியும் (கன்னிசாமி) பக்தர்களும் பலர் கலந்து கொண்டனர்.
படிபூஜை, பஜனை
திண்டுக்கல் மலையடிவாரம் அய்யப்பன் கோவிலில், கார்த்திகை மாதத்தின் முதல் நாளையொட்டி நேற்று கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பின்னர் கோவில் குருசாமிகள் அய்யப்ப பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
அதைத்தொடர்ந்து 5.30 மணியளவில் கொடியேற்றப்பட்டது. பின்னர் 7 மணியளவில் சுவாமி அய்யப்பனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனையடுத்து கார்த்திகை, மார்கழி ஆகிய 2 மாதம் முழுவதும் நாள்தோறும் இரவு 9 மணியளவில் படிபூஜை, பஜனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.
மேலும் அடுத்த மாதம் 26-ந் தேதி (திங்கட்கிழமை) மண்டல பூஜையையொட்டி பொது அன்னதானமும், அடுத்த நாள் 27-ந்தேதி இரவு 7 மணியளவில் அலங்கார மின்தேர் ஊர்வலமும் நடக்கிறது.
பக்தர்களின் சரண கோஷம்
திண்டுக்கல் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவிலில் கார்த்திகை மாதத்தின் முதல் தேதியையொட்டி காலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டு சுவாமி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு துளசி மாலை அணிந்து அய்யப்ப விரதத்தை தொடங்கினர்.
மேலும் திண்டுக்கல் நாகல்நகர் ஸ்ரீ அய்யப்பன் மணிமண்டபம் உள்பட திண்டுக்கல்லில் உள்ள முக்கிய கோவில்களில் சுவாமி அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் நேற்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். பின்னர் மாலை நேரத்தில் கோவில்களில் நடைபெற்ற பஜனைகளிலும் பக்தர்கள் பங்கேற்றனர். இதனால் அய்யப்ப பக்தர்களின் சரண கோஷம் ஒலிக்க தொடங்கி இருக்கிறது.
தெய்வீக அனுபவம்
இதுபற்றி திண்டுக்கல்லை சேர்ந்த குருசாமி பன்னீர்செல்வம் (வயது 70) கூறுகையில், நான் கடந்த 40 ஆண்டுகளாக மாலை அணிந்து விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறேன். பெருவழி பாதையில் சென்று சாமி தரிசனம் செய்வதை பலரும் விரும்புவார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பெருவழி பாதையில் அனைவரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு தளர்வு ஏற்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து உள்ளனர். முதல்முறை மாலை அணியும் கன்னிசாமிகளும் நிறைய வந்தனர். விரதம் இருந்து அய்யப்ப சாமியை தரிசனம் செய்வது ஒரு தெய்வீக அனுபவம். இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் அய்யப்ப பக்தர்கள் உள்ளனர். மலேசியாவில் இருந்து ஆண்டு தோறும் 1,000 பக்தர்கள் திண்டுக்கல்லுக்கு வந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்கின்றனர். இந்த ஆண்டும் அவர்கள் வர இருக்கின்றனர், என்றார்.
முதல்முறையாக மாலை அணிந்துள்ள கார்த்திக்ராஜா (26) கூறுகையில், நான் பழனி முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வருவேன். எனது நண்பர்கள் பலர், அய்யப்ப சாமிக்கு மாலை அணிந்து சபரிமலை சென்று வருவார்கள். மெய்சிலிர்க்கும் வகையில் அய்யப்ப தரிசனத்தை பற்றி கூறுவார்கள். இதனால் எனக்கும் சபரிமலை சென்று அய்யப்ப சாமியை தரிசனம் செய்யும் ஆவல் ஏற்பட்டது. இதனால் முதல்முறைாக மாலை அணிந்து விரதம் இருக்கிறேன். இது முதல் நாளிலேயே புதுவிதமான அனுபவம் கிடைத்து இருக்கிறது, என்றார்.