சதுரகிரிக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்


சதுரகிரிக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
x

மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆடி மாத பிரதோஷ வழிபாட்டுக்கு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆடி மாத பிரதோஷ வழிபாட்டுக்கு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர்.

பிரதோஷ வழிபாடு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்குவது வழக்கம்.

நேற்று பிரதோஷம் ஆகும். இதனால் வழக்கம் போல் அனுமதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் இருந்தனர். ஆனால் மலைப்பகுதியில் மழை பெய்து வருவதாலும், நீர்வரத்து ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதாலும் வருகிற 12-ந் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் ஏமாற்றம்

நேற்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அனுமதி ரத்து என்பது தெரியாமல் அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து இருப்பதால் அனுமதி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அனுமதி வழங்காததால் எண்ணற்ற பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்தநிலையில் பக்தர்கள் இன்றி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிேஷகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.


Next Story