பஸ்கள் இல்லாததால் கிரிவலம் வந்த பக்தர்கள் 'திடீர்' மறியல்


பஸ்கள் இல்லாததால் கிரிவலம் வந்த பக்தர்கள் திடீர் மறியல்
x

திருவண்ணாமலையில் பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் காலையில் தொடங்கி நேற்று காலையில் நிறைவடைந்தது.

இதையொட்டி திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து கிரிவலம் சென்ற பக்தர்கள் பலர் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி நேற்று முன்தினம் மாலையில் இருந்து நேற்று காலை வரை நகரில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டி அருகில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன.

பக்தர்கள் சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்த தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு முறையாக பஸ்கள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கிரிவலம் சென்று களைப்புடன் வந்த பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்தும் பஸ்கள் வரவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் திண்டிவனம் சாலையில் உள்ள மேம்பாலத்தின் அருகில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் செல்லும் பகுதிகளுக்கு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. திடீர் மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story