பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
பங்குனி உத்திரம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 26-ந்தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி காலையிலும், இரவிலுமாக தினமும் ஒரு வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பங்குனி உத்திரம் நடைபெற்றது. உத்திரத்தையொட்டி மேளதாளங்கள் முழங்க, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல்முருகனுக்கு அரோகரா என்று பக்திகோஷங்கள் எழுப்பியபடி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் பால்குடங்கள் சுமந்தும், காவடிகள் எடுத்தும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். பங்குனி பெருவிழாவின் 9-ம் நாளான நேற்று இரவில் முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்கக்குதிரையில் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை( 7-ந்தேதி) முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகமும், 8-ந்தேதி முருகப்பெருமான் தெய்வானைக்கு திருக்கல்யாணமும், 9-ந்தேதி மகா தேரோட்டமும் நடக்கிறது, விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
பாலதண்டாயுதபாணி கோவில்
குலசேகரன் கோட்டை சிறுமலை அடிவாரத்தில் உள்ள கோம்பை கரட்டில் பாலதண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை நடந்தது. குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது.
உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ய காலில் தண்டை கட்டிக் கொண்டு போருக்கு தயார் நிலையில் இங்கிருந்து செல்வது போன்ற தோற்ற அமைப்புகளுடன் காணப்படும் இந்த கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.