ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்:பூலாம்பட்டி காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள்கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
எடப்பாடி
ஆடிப்பெருக்கையொட்டி நேற்று பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள காவிரி கரைகளில் பக்தர்கள் புனித நீராடி, சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
பூலாம்பட்டி
சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லை பகுதியில் அமைந்துள்ள பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதி, படித்துறை, பழனிஆண்டவன் துறை, கோட்டைமேடு, கோனேரிப்பட்டி, கூடக்கல், குப்பனூர், வடக்கத்திக்காடு உள்ளிட்ட பல்வேறு காவிரிக்கரை பகுதிகளில், திரளான பக்தர்கள் ஆடிப்பெருக்கையொட்டி அதிகாலை முதலே காவிரியில் இறங்கி புனித நீராடி பூஜை செய்தனர். மேலும் இப்பகுதியில் உள்ளூர் கோவில்களில் உள்ள உற்சவர் சிலைகள், ஊர்வலமாக காவிரி கரைக்கு கொண்டுவரப்பட்டு, காவிரியில் புனித நீராடினர்.
தொடர்ந்து காவிரி கரையில் சிலைகள் மற்றும் காவடி போன்ற பூஜை பொருட்களை பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். மேலும் புதுமண தம்பதிகள் தங்கள் திருமணத்தில் அணிந்திருந்த பூ மாலைகளை வாழை இலையில் வைத்து கற்பூர தீபம் ஏற்றி, காவிரி நீரில் மிதக்க விட்டு பூஜை செய்தனர்.
இதேபோல் சுமங்கலிகள் காவிரியில் புனித நீராடி, சுமங்கலி பூஜை செய்து புது தாலிக்கயிறு அணிந்தனர். ஆடிப்பெருக்கையொட்டி பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில், நந்திகேஸ்வரர் சன்னதி, காவிரித்தாய் கோவில், படித்துறை விநாயக பெருமான் சன்னதி உள்பட பல்வேறு கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வழக்கத்தை விட கூடுதலான அளவில் இப்பகுதியில் பக்தர்கள் வருகை இருந்த நிலையில், பூலாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார காவிரி கரை பகுதிகளில் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில்
இளம்பிள்ளை அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கையொட்டி, அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சித்தேஸ்வரருக்குஅபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டது. சுற்றுவட்டார ஊர்களில் உள்ள கிராம கோவிலில் உள்ள சாமி சிலைகள், வேல், கத்தி, கம்பு, ஈட்டி, என பூஜை பொருட்கள், டிராக்டர், ஆட்டோக்களில் பக்தர்கள் கொண்டு வந்து கழுவி அலங்காரம் செய்தனர். பின்னர் புனித தீர்த்த குளங்களில் நீராடி, தீர்த்தங்களை எடுத்துக் கொண்டு மேளதாளத்துடன் தங்களது கிராமங்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து, ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர்.
இடங்கணசாலை, இளம்பிள்ளை, சின்னப்பம்பட்டி, ஆட்டையாம்பட்டி, இரும்பாலை, திருமலைகிரி, தாரமங்கலம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் சித்தேஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று வணங்கி சென்றனர். அதேபோல் அருகில் உள்ள காளியம்மன், பாலமுருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது.