மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு
தமிழ் புத்தாண்டையொட்டி மதுரையில் மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் உள்பட பல கோவில்களில் பக்தர்கள் வழிபட்டனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி மதுரையில் மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் உள்பட பல கோவில்களில் பக்தர்கள் வழிபட்டனர்.
தமிழ் புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் அதிகாலை முதல் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனத்திற்காக வந்ததால் மீனாட்சி அம்மன் கோவிலில் கூட்டம் அலைமோதியது.
மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவில் முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது. இது பக்தர்கள் அனைவரின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்தது. பக்தர்களின் வசதிக்காக மாசி வீதிகள் மற்றும் ஆடி வீதிகளில் தற்காலிக கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
சாமி தரிசனம்
புத்தாண்டை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி, மதுரை கூடலழகர் பெருமாள் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், மதன கோபால சுவாமி கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், ஒத்தகடை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில், யோக நரசிங்க பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளழகர் கோவில்
தமிழ் வருடப்பிறப்பையொட்டி நேற்று மதுரையை அடுத்த அழகர்மலையில் உள்ள நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி அம்மனை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து அழகர்மலை அடிவாரத்தில் இருக்கும் கள்ளழகர் கோவிலில் சுந்தரராசபெருமாள், தேவியர்களுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. கல்யாணசுந்தரவல்லி, ஆண்டாள் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இக்கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலிலும் பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. ஏராமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
தானியங்கள் காணிக்கை
முன்னதாக இக்கோவிலுக்கு வந்த பக்தர்கள், விவசாயிகள் பாரம்பரிய பழங்கால வழக்கப்படி நெல் உள்ளிட்ட தானிய வகைகளையும், காசு பணத்தையும் காணிக்கையாக செலுத்தினர். மேலும் முருகப் பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், சுவாமி வெற்றிலை, ரோஜா மாலை சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அருகில் உள்ள வித்தகவிநாயகர், வேல்சன்னதியிலும் பூஜைகள் நடந்தது. உற்சவர் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேம் நடந்தது. இங்கும் ஏராளமான பக்தர்கள் குவிந்து நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.








