குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்


குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்
x

கடலூர் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் 6 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகளுக்கு மாத்திரை வழங்கப்பட உள்ளது

கடலூர்

கடலூர்

ரத்த சோகை

தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகளவு ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு குடற்புழு தொற்று ஒரு காரணமாக உள்ளது. எனவே அதனை தடுக்கும் பொருட்டு ஆண்டுக்கு இருமுறை குடற்புழு நீக்கம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்பட உள்ளது.

இதில் விடுபட்ட அனைவருக்கும் வருகிற 16-ந் தேதி குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கப்பட உள்ளது. இச்சிறப்பு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரையுள்ள 6 லட்சத்து 36 ஆயிரத்து 712 குழந்தைகளும், 20 முதல் 30 வயதுள்ள 2 லட்சத்து 13 ஆயிரத்து 963 பெண்களும் (கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் நீங்கலாக) பயனடைய உள்ளனர்.

குடற்புழு நீக்க மாத்திரை

இதில் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ½ மாத்திரையும், 2 முதல் 30 வயது வரையுள்ளவர்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும். இந்த மாத்திரை அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். ஆகவே பொதுமக்கள், இந்த வாய்ப்பினை பயன் படுத்தி பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story