5½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்


5½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கலெக்டர் தொடங்கி வைத்தார்

மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் கலந்து கொண்டு மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

1,382 மையங்களில்

உலக மக்கள் தொகையில் 24 சதவீதம் பேர் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், குழந்தைகள் நல மையங்களின் வாயிலாக மொத்தம் 1,382 மையங்களில் மொத்தம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 184 பேருக்கு அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இவற்றை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காலை அல்லது மதிய உணவு சாப்பிட்ட பிறகு மாத்திரையை நன்கு கடித்து, மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும். ஒன்று முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு(200 மி.கி) அரை மாத்திரை, 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 1 மாத்திரை(400 மி.கி), 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு 1 மாத்திரை அல்பெண்டாசோல்(400 மி.கி) வழங்க வேண்டும். மேலும் விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வருகிற 16-ந் தேதி மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை நோய் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் நல மைய பணியாளர்கள், பெற்றோர்,ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் குடற்புழு மாத்திரையின் பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இத்திட்டம் வெற்றியடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவா் கூறினார். இதில் முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, துணை இயக்குனர்(சுகாதாரப் பணிகள்) ராஜா, தலைமையாசிரியை கீதா மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story