கந்துவட்டியை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை
கந்து வட்டி கொடுமையை போக்க ‘ஆபரேஷன் கந்து வட்டி’ என்ற புதிய நடவடிக்கையை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
சென்னை,
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் செல்வக்குமார் என்பவர் கந்துவட்டி கொடுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக அனிதா என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றறிக்கை
இதனையடுத்து கந்து வட்டியை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கந்து வட்டி கொடுமை
கந்து வட்டி கொடுமையை தடுக்க அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அதிக வட்டி வசூல் தடை சட்டம் 2003-ன் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகள், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள கந்துவட்டி புகார்கள் மற்றும் வழக்குகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.
கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் பொது மக்களிடம் மிகுந்த வட்டி வசூலித்த தொகை எவ்வளவு? என்பது பற்றி முறையாக விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய சட்ட ஆலோசனைகளை பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கந்துவட்டிக்கு விடுபவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி அவர்கள் வைத்திருக்கும் கந்துவட்டி தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற வேண்டும். கையெழுத்து போடப்பட்ட வெற்று பேப்பர்கள், கையெழுத்திடப்பட்ட வெற்று காசோலைகள் மற்றும் அதுதொடர்பான ஆவணங்கள் இருந்தால் அவைகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
'ஆபரேஷன் கந்து வட்டி'
கந்துவட்டி தொடர்பான இந்த நடவடிக்கைகளுக்கு 'ஆபரேஷன் கந்து வட்டி' என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகளை போலீசார் திறம்பட வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும். கந்து வட்டி தொடர்பான நடவடிக்கைகளில் சிறப்பாக முன்மாதிரியாக பணியாற்றுபவர்களுக்கு அதற்குரிய அங்கீகாரம் தனித்தனியாக அளிக்கப்படும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் வரவேற்பு
தற்போதைய சூழலில் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக கடன் வாங்கி குடும்பத்தை நடத்தும் நிலை இருக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு தனியார் நிதி நிறுவனங்கள் 'குறைந்த வட்டிக்கு கடன்', 'எந்த உத்தரவாதமும் தேவையில்லை' என கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் ஈர்க்கப்படுவோர் அதிக வட்டிக்கு கடனை வாங்குகிறார்கள். பின்னர் வட்டிக்கு மேல் வட்டி ஏறிவிடுவதால், கடன் சுமை அதிகமாகி கடனை செலுத்த முடியாமல் தத்தளித்து வருகிறார்கள்.
மிகவும் அவசர தேவைக்கு கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். கந்து வட்டி என்பது 'ஜெட்' வேகத்தில் வட்டியை உயர்த்திவிடும். வாங்கும் கடனை விட வட்டி இரட்டிப்பாகி சில நாட்களிலேயே பெரும் சுமையை அளித்துவிடும். பணத்தை திருப்பி செலுத்தாவிட்டால் கந்து வட்டிக்காரர்கள் மிரட்டலுக்கு ஆளாக நேரிடுகிறது. இதில் அவமானம் தாங்காமல் பலர் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. இந்தநிலையில் கந்து வட்டி கொடுமையை போக்க போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.