டிரோன் கேமரா மூலம் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை


டிரோன் கேமரா மூலம் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை
x

ரோந்து செல்லமுடியாத இடங்களில் டிரோன் கேமரா மூலம் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்று திருச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார்.

திருச்சி

ரோந்து செல்லமுடியாத இடங்களில் டிரோன் கேமரா மூலம் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்று திருச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார்.

ஆலோசனை

திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற அவசர உதவி மைய தொடக்க விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை திருச்சிக்கு விமானம் மூலம் வந்திருந்தார். திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் மாநகர காவல் அலுவலகத்தில் டி.ஜி.பி. ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-

திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் நலனை பேணிக்காத்து, ரோந்து பணி மேற்கொண்டு, குற்றவாளிகள் மற்றும் கெட்ட நடத்தைக்காரர்கள் மீது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிரோன் கேமரா

கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சரின் முகவரி மனுக்கள், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக பெறப்படும் மனுக்களின் மீது துரித விசாரணை மேற்கொள்ள வேண்டும். தற்போது காவல் துறையில் நவீனமயமாக்கப்பட்ட பல சேவைகள் செயலில் உள்ளது. அதை பயன்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் அதிகமாக விபத்து நடைபெறும் இடங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடங்கள் ஆகியற்றை கண்டறிந்து தீர்வு காண வேண்டும். ரோந்து செல்லமுடியாத இடங்களில் நடைபெறும் குற்றங்களை கண்டறிய டிரோன் கேமரா மூலம் கண்காணித்து குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசினார்.

போலீசாருக்கு பாராட்டு

முன்னதாக, திருச்சி மாநகர் மற்றும் திருச்சி சரகத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கையிலும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதிலும் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு அவர் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார். இந்த கூட்டத்தில் மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி மாநகர கமிஷனர் சத்தியபிரியா, திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், திருச்சி மாநகர துணை கமிஷனர்கள், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

என்.ஐ.டி.யில் அவசர உதவி அமைப்பின் சிறப்பு மையம்

இதைத்தொடர்ந்து திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி.யில் அவசர உதவி அமைப்பின் சிறப்பு மையத்தை தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து பேசும்போது, எதிர்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஓட்டுனர் இல்லாமல் பஸ், ெரயில், விமானம் ஓடும் நிலைமை ஏற்படும். கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக போலீஸ் இல்லாமல் சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும். இதன் காரணமாக பல துறையை சேர்ந்தவர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படலாம் என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு என்.ஐ.டி. இயக்குனர் (பொறுப்பு) ராம்கல்யாண் தலைமை தாங்கினார். இதில் என்.ஐ.டி.பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story