தனுஷ்கோடியில் காட்சி பொருளான கலங்கரை விளக்கம்


தனுஷ்கோடியில் காட்சி பொருளான கலங்கரை விளக்கம்
x

தனுஷ்கோடியில் ரூ.8 கோடியில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால் அது காட்சி பொருளாக காட்சியளிக்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

தனுஷ்கோடியில் ரூ.8 கோடியில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால் அது காட்சி பொருளாக காட்சியளிக்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

ரூ.8 கோடியில்...

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரை. இங்கு சாலை வசதி வந்த பின்னர் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

அதுபோல் அதிக மீன்பிடி படகு மற்றும் மீனவர்களை கொண்ட பகுதியாக இருப்பதால் மீன் பிடிக்க சென்று கரை திரும்பும் மீனவர்களுக்கு வசதியாக தனுஷ்கோடி கடற்கரையில் சுமார் 50 மீட்டர் உயரத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து துறையின் கீழ் ரூ.8 கோடி நிதியில் புதிதாக கலங்கரை விளக்கம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

அனுமதி இல்லை

இந்த கலங்கரை விளக்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை கலங்கரை விளக்கத்தையும் மேல் பகுதியில் சுற்றுலா பயணிகள் சென்று பார்த்து வர அனுமதி வழங்கப்படவில்லை. தமிழகத்தில் பல்வேறு கலங்கரை விளக்கங்களில் காலை மற்றும் மாலை என குறிப்பிட்ட நேரங்கள் ஒதுக்கி சுற்றுலா பயணிகள் மேலே சென்று அந்த பகுதியில் அழகை பார்த்து ரசித்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தனுஷ்கோடி கடற்கரையில் லிப்ட் வசதிகளுடன் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டுள்ள நிலையிலும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால் அது வெறும் காட்சி பொருளாகவே இருந்து வருகின்றது.

அரசுக்கு வருவாய் இழப்பு

எனவே தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி இயற்கை அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை கடற்கரையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. தனுஷ்கோடியில் கலங்கரை விளக்கத்தை பார்க்க சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே காட்சி பொருளாக காணப்படும் தனுஷ்கோடி கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


Next Story