ஆபாச வீடியோவை வெளியிடுவோம்.. தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: வசமாக சிக்கிய அரசியல் புள்ளிகள்


ஆபாச வீடியோவை வெளியிடுவோம்.. தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்:  வசமாக சிக்கிய அரசியல் புள்ளிகள்
x
தினத்தந்தி 29 Feb 2024 1:29 PM IST (Updated: 16 March 2024 12:06 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளர், சீர்காழி ஒன்றிய பா.ஜ.க. முன்னாள் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27 -வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இருந்து வருகிறார்.

இந்நிலையில், மடாதிபதியின் சகோதரரும், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் உள்ள விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ, ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும், இதனை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறி, கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.

இந்த சம்பவத்தில் செம்பனார்கோயிலைச் சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரம், மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர்.

இவ்வாறு அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச்சம்பவம் தொடர்பாக சிறப்புப் படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத்(32), சீர்காழி ஒன்றிய பா.ஜ.க. முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ்33), செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(39), தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ்(28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை நேற்று இரவு 10 மணியளவில் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து 4 பேரும் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் வழக்கு தொடர்பாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், ஆதீனம் உதவியாளர் செந்தில், மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story