தர்மபுரி: ரெயில் முன் பாய்ந்து தாய்-மகள் தற்கொலை - போலீசார் விசாரணை


தர்மபுரி: ரெயில் முன் பாய்ந்து  தாய்-மகள் தற்கொலை - போலீசார் விசாரணை
x

தர்மபுரியில் ரெயில் முன் பாய்ந்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி செந்தில் நகர் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் இன்று மதியம் 2 பெண்கள் அந்த வழியாக வந்த ரெயில் மோதி உடல் சிதறி பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 2 பெண்களின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறுகையில்,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கும்ளாபுரத்தைச் சேர்ந்த ராதாம்மாள் (வயது 60), சுமித்ரா (32) என தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் தாய்-மகள் என்பது விசாரணையில் உறுதியானது.

சுமித்ராவின் மகள் ஹர்பிதா(14). கும்ளாபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9- ம் வகுப்பு படித்து வந்த மாணவியான இவர் தொடர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி ஹர்பிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தர்மபுரிக்கு வந்த சுமித்ரா மகள் இறந்த சோகத்தில் இருந்துள்ளார். இதைப்பார்த்து ராதம்மாவும் மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் ராதம்மாள் சுமித்ரா ஆகியோர் மன வேதனையை தாங்க முடியாமல் தர்மபுரி செந்தில் நகர் பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரவித்தனர்.


Next Story