தர்மபுரி: காளியம்மன் கோவில் தேர் சாய்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு


தர்மபுரி அருகே காளியம்மன் கோவில் தேர் சாய்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஅள்ளி ஸ்ரீ காளியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 10-ம் தேதி தொடங்கியது. 11-ம் தேதி தீமிதித்தல் மற்றும் கும்ப பூஜை அன்னதானம் நடைபெற்றது.

நேற்று மாலை அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் மற்றும் இரவு அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை அம்மன் ரதத்தில் ஏறி பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். மாலை 4 மணிக்கு அம்மன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலை சேர்வதற்கு 50 அடி தூரத்தில் இருக்கும் போது திடீரென்று முன் புறமாக சாய்ந்து விழுந்தது.

அப்போது தேரை இழுத்து வந்த பக்தர்கள் சிதறி ஓடினர். இதில் தேரை இழுத்து வந்த பக்தர்கள் சாய்ந்து விழுந்த தேருக்கடியில் சிக்கினர். இதில் படுகாயமடைந்த மனோகரன் (வயது 57) மற்றும் சரவணன் (60) ஆகிய இரண்டு பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில அவர்கள் இரண்டு பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். மேலும், 5 பேர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story