திரவுபதியம்மன் கோவிலில் தர்மராஜா பட்டாபிஷேகம்

விழுப்புரம் அருகே 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தர்மராஜா பட்டாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த கோலியனூர் அருகே உள்ளது மேல்பாதி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது.
பழமைவாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவின்போது 33 அடி உயர தேரை, பக்தர்கள் தங்கள் தோளிலேயே சுமந்துகொண்டு மாடவீதியை சுற்றி வலம் வருவார்கள். அத்துடன் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கோவிலில் தர்மராஜா பட்டாபிஷேக வீதி உலா பாரம்பரியம் மிகுந்த விழாவாக நடைபெறும்.
60 ஆண்டுகளுக்கு பிறகு
இவ்விழாவானது கடந்த 1962-ல் சிறப்பாக நடந்துள்ளது. அதன் பின்னர் 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த ஆண்டு இவ்விழா கடந்த 23-ந் தேதி தொடங்கப்பட்டது. விழாவையொட்டி அரிசிகவுண்டன்பாளையம் நாகரத்தினம், பாரத சொற்பொழிவு ஆற்றினார்.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு பகவத் அனுக்ஞை, எஜமான சங்கல்பம், புண்யாகம், பூர்ணாகுதி உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
பட்டாபிஷேக பூஜை
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 6 மணிக்கு பட்டாபிஷேக பூஜை ஆரம்பிக்கப்பட்டது. இதில் காலை 7.50 மணியளவில் மேள, தாளங்கள் முழங்க தர்மராஜா சாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ரதத்தில் எழுந்தருள செய்து பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு சாமி வீதி உலா புறப்பாடு நடந்தது.
இதற்காக மேல்பாதி கிராமத்தில் சாமி வீதிஉலா நடைபெறும் முக்கிய வீதிகளான குரும்பன்கோட்டை மெயின்ரோடு, திரவுபதியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ஓடைக்கார தெரு, ரைஸ்மில் தெரு, பிள்ளையார் கோவில் ஒட்டுத்தெரு ஆகிய வீதிகள்தோறும் பச்சைகீற்று (தென்னை ஓலை) கொண்டு பந்தலிடப்பட்டிருந்தது. தர்மராஜா சாமி வீதிஉலா வரும்போது செழுமையாக காட்சியளிக்க வேண்டும் என்பதால் தென்னங்கீற்றால் ஆன பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
கரகாட்டம்
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரை சூழ மங்கள இசை, கரகாட்டம், மயிலாட்டம், புலி ஆட்டம், உறுமி மேளம் முழங்க சிறப்பு மலர் அலங்காரத்தில் திரவுபதியம்மன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன், பீமன் உள்ளிட்ட சாமிகள் முன்னே செல்ல பட்டாபிஷேகம் செய்யப்பட்ட தர்மராஜா ரதத்தில் எழுந்தருளி வீதி, வீதியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமியை வரவேற்று தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், கிராம இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர். மேல்பாதி கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கு பிறகு தர்மராஜா பட்டாபிஷேக பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றதால் கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.






