ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தர்ணா
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம், ரெட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சாலபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஜல்லிக்கட்டு குழுவினர், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து இருந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதி அளிக்கவில்லை. இது தொடர்பாக ஜல்லிக்கட்டு குழுவினர், மாவட்ட நிர்வாகத்தை பலமுறை நேரில் சந்தித்து முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால், அதிருப்தி அடைந்த ஜல்லிக்கட்டு குழுவினர், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஜல்லிக்கட்டுகுழு ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உரிய அனுமதி வழங்கப்படும்' என உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.