காட்டுப்பன்றி தாக்கி படுகாயமடைந்த பெண் தர்ணா


காட்டுப்பன்றி தாக்கி படுகாயமடைந்த பெண் தர்ணா
x

பேரணாம்பட்டு அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயம் அடைந்த பெண் நிவாரணம் கேட்டு தர்ணாவில் ஈடுபட்டார்.

வேலூர்

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயம் அடைந்த பெண் நிவாரணம் கேட்டு தர்ணாவில் ஈடுபட்டார்.

காட்டுப்பன்றி கடித்தது

பேரணாம்பட்டு அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயரங்கன் மனைவி கவுரியம்மாள் (வயது 62). இவரது வீட்டின் பின்புறம் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் காட்டுப் பன்றிகள், மான்கள் நடமாட்டம் உள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று கவுரியம்மாள் தனது வீட்டினுள் உட்கார்ந்திருந்த போது திடீரென காட்டுப்பன்றி ஒன்று உள்ளே புகுந்தது. அந்த காட்டுப்பன்றி கவுரியம்மாளை கீழே தள்ளியதில் அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டதோடு வலது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

உடனடியாக அவர் குடியாத்தத்திலுள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து பேரணாம்பட்டு வனத்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை

அதன்பேரில் வனவர் சரவணன் தனியார் மருத்துவமனைக்கு வந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த கவுரியம்மாளிடம் விசாரணை நடத்தினார். அப்போது வனவர் சரவணன் கவுரியம்மாளை தாக்கியது காட்டுப்பன்றி இல்லை என்றும் ஊருக்குள் மேயும் நாட்டுப்பன்றிதான் கடித்தது என்றும் அந்த நேரத்தின்போது காட்டுப்பன்றி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று கவுரியம்மாள் தனது உறவினர்களுடன் பேரணாம்பட்டு வனசரக அலுவலகத்திற்கு வந்து காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த தனக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என ் முறையிட்டார். அப்போது அங்கிருந்த வன ஊழியர் நாளை (அதாவது இன்று) வரும்படி கூறி அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

தர்ணா

இதனால் ஆத்திரமடைந்த கவுரியம்மாள் தனது உறவினர்களுடன் வனத்துறை அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது வெளியில் சென்றிருந்த வனசரகர் சதீஷ்குமார் அலுவலகத்திற்கு வந்தார். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவரிடம் வரும் திங்கட்கிழமைக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்று அவர்கள் அங்கிருந்து ெசன்றனர்.


Next Story