இந்து முன்னணி, பா.ஜனதாவினர் தர்ணா போராட்டம்
விக்கிரமசிங்கபுரத்தில் இந்து முன்னணி, பா.ஜனதாவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் மெயின் ரோட்டில் உள்ள கிறிஸ்தவ சபையின் முன்பாக கார் நிறுத்தும் வகையில் இரும்பு தகடாலான மேற்கூரை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அருகில் உள்ள கோவில் மறைக்கப்படும் என்று கூறி, இந்து முன்னணி நகர தலைவர் முருகன் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து முருகன் தலைமையில் இந்து முன்னணியினர், பா.ஜனதாவினர் நேற்று மாலையில் கிறிஸ்தவ சபையின் முன்பாக அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், பா.ஜ.க. நகர தலைவர் தங்கேசுவரன், வக்கீல் பிரிவு செயலாளர் வெங்கடேஷ், நகர பொதுச்செயலாளர் பாலாஜி, நகர செயலாளர சட்டநாதன், வர்த்தக பிரிவு ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விக்கிரமசிங்கபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கிறிஸ்தவ சபையின் முன்பு மேற்கூரை அமைக்கும் பணி கைவிடப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.