குழந்தையுடன் தம்பதி தர்ணா
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையுடன் தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா நவலை கிராமத்தை சேர்ந்தவர் ரங்கீஸ்குமார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அங்கு போர்டிகோவில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் கூறுகையில், நவலை கிராமத்தில் சொந்த இடத்தில் சிறிய அளவில் நான் பிரியாணி கடை நடத்தி வருகிறேன். அந்த கடை வைத்துள்ள இடத்தில் வழித்தட பாத்தியம் இருப்பதாக கூறி ஒருவர் மிரட்டல் விடுத்து கடைக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினார். இதை கேட்ட எனது குடும்பத்தினர் தாக்கப்பட்டனர். இது குறித்து கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது. குழந்தையுடன் தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.