ஊராட்சி தலைவர்கள் தர்ணா போராட்டம்


ஊராட்சி தலைவர்கள் தர்ணா போராட்டம்
x

புதுச்சத்திரம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 2022-2023-ம் ஆண்டிற்கான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்காக ஏ.கே.சமுத்திரம், சர்க்கார் நாட்டாமங்கலம், நவணி தோட்டக்கூர்பட்டி மற்றும் களங்காணி ஆகிய 4 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. மேலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலமாக பணிகள் தேர்வு செய்யப்பட்டு, அதற்காக ஊராட்சியில் ஒப்புதல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று ஏலத்தில் பங்கேற்க ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால் நிர்வாக நலன் கருதி தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தனம் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் தலைவரும், ஏ.கே.சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவருமான கஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் கூட்டமைப்பின் செயலாளரும், நவணி தோட்டக்கூர்பட்டி தலைவருமான கந்தசாமி, பொருளாளரும், பாப்பிநாயக்கன்பட்டி தலைவருமான ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், சண்முகம், நாகராஜன், சதீஷ்குமார், தியாகராஜன் மற்றும் வரதராஜன், சரவணன், ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் ஒன்றிய அலுவலக நுழைவுவாயிலில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏலம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதற்கு ஊராட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.


Next Story