கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்யக்கோரி மாணவிகள் திடீர் தர்ணா போராட்டம்


கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்யக்கோரி  மாணவிகள் திடீர் தர்ணா போராட்டம்
x

நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்யக்கோரி மாணவிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்

பணியிடை நீக்கம்

நாமக்கல்-திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 3 ஆயிரம் மாணவிகள் சுழற்சி முறையில் படித்து வருகின்றனர். இக்கல்லூரி முதல்வராக பால்கிரேஸ் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்று, இதே கல்லூரியில் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

இக்கல்லுாரியில் வணிகவியல் மற்றும் பொருளாதார துறையில், 350-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு துறைத்தலைவராக நல்லுசாமியும், உதவி பேராசிரியர் ஒருவரும் மட்டுமே பணியில் உள்ளனர்.

கையெழுத்து போட மறுப்பு

இந்நிலையில் நேற்று முன்தினம் வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் நல்லுசாமி, தனது துறையில் படிக்கும் முதுகலை மாணவிகளுக்கு இண்டன்ஷிப் பயிற்சிக்கு கையெழுத்து வாங்க, முதல்வர் பால்கிரேஸை சந்தித்து உள்ளார். அப்போது கல்லூரி முதல்வர் மாணவிகள் முன்னிலையில், தாமதமாக வந்ததாக கூறி துறைத்தலைவர் நல்லுசாமியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் கையெழுத்து போட முடியாது எனக்கூறி மறுத்து விட்டார்.

இதனால் மாலை 6 மணி வரை முதல்வர் அலுவலகம் வெளியே துறை தலைவரும், மாணவிகளும் காத்திருந்தனர். மாலை 6 மணிக்கு மேல், மாணவிகளை மட்டும் உள்ளே அழைத்த முதல்வர், துறை தலைவர் நல்லுசாமிக்கு எதிராக கடிதம் எழுதி கேட்டு உள்ளார். அதற்கு மாணவிகள் முடியாது என கூறியபோது, அவர்களை மிரட்டி கடிதம் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு கல்லூரிக்கு வந்த வணிகவியல், பொருளாதார துறை மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோர் கல்லூரி முன்பு சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் தடுத்தபோது அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் பேராசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் போராட்டத்தை கைவிட மறுத்த மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர்.

இது குறித்து கல்லூரி முதல்வர் பால்கிரேஸிடம் கேட்டபோது, போராட்டத்தில் ஈடுபடும் மாணவிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் என்றார்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே தகவல் அறிந்ததும் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் சிலரையும், துறைத்தலைவர் நல்லுசாமி, பெண் அறை கண்காணிப்பாளர் ஆகியோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, சுமார் 5 மணி நேரம் நடந்த தர்ணா போராட்டத்தை கைவிட்டு மாணவிகள் கலைந்து சென்றனர்.


Next Story