கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்


கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
x

குமாரபாளையத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

குமாரபாளையம்

குமாரபாளையத்தில் 10-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண், பெண் தொழிலாளர்களுக்கும் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும் என வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, குமாரபாளையம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.சி.டி.யு. பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.சி.டி.யு. சங்க மாவட்ட செயலாளர் மணிவேல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். குமாரபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் என்.சக்திவேல் வாழ்த்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக, விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து பேச வேண்டும், கடும் விலைவாசி உயர்வால் தவித்து வரும் விசைத்தறி தொழிலாளர்கள், மிக சொற்ப தினக்கூலியில் வாழ்வாதாரத்தை நடத்துகின்றனர். விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வு மேம்படும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி 75 சதவீத கூலி உயர்வு பெற்று தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் எல்.டி.யு.சி. கோவிந்தராஜ், எச்.எம்.எஸ்.செல்வராஜ், சி.ஐ.டி.யு. விசைத்தறி சங்க மாவட்ட குழு உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் ஏ.ஐ.சி.சி.டி.யு. சுப்பிரமணி நன்றி கூறினார். கூலி உயர்வு குறித்த 3-ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.


Next Story