அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x

நாமக்கல்லில் நேற்று 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

தர்ணா போராட்டம்

10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்களை கொடுப்பதை சரி செய்திட உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் காந்திமதி, ஜெயமணி, குர்ஷித், அம்பிகா, ஜமுனா, சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாநில துணை தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட செயலாளர் பிரேமா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, துணை செயலாளர் சிவராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

பதவி உயர்வு

இந்த போராட்டத்தின் போது கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கோடைவிடுமுறை விடுவது போல, அங்கன்வாடி மையங்களுக்கும் ஒருமாத காலம் விடுமுறை அளிக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவிதமான நிபந்தனை இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

பணியில் இருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடன்உதவி வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டு வழங்குவது போல, அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story