தர்மபுரி பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள்பொதுமக்கள் தர்ணா போராட்டம்
தர்மபுரி பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் நிலங்கள்
தர்மபுரி அன்னசாகரம் தியாகி தீர்த்தகிரியார் தெருவில் 360 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குறிப்பிட்ட சில புல எண்கள் கொண்ட நிலங்கள் விநாயகர் சிவசுப்பிரமணிய சாமி கோவில் நிலங்கள் என்றும், அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்றும் சிலர் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையால் பதிவுத்துறையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கான தடங்கல் மனுவை நீக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
தர்ணா போராட்டம்
தொடர்ந்து சம்பந்தப்பட்ட புல எண்களில் பத்திர பதிவு செய்ய தடை ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அந்த பகுதிகளில் உள்ள நிலங்களை பத்திர பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த பல மாதங்களாக வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பொது மக்கள் தர்மபுரி பத்திர பதிவு அலுவலகத்திற்குள் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சங்கர், தாசில்தார் ஜெயசெல்வன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தர்மபுரி பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் நேற்று 3 மணி நேரத்திற்கும் மேல் பரபரப்பு ஏற்பட்டது.