கிராம மக்கள் தர்ணா போராட்டம்


கிராம மக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 4 Sep 2023 6:45 PM GMT (Updated: 4 Sep 2023 6:46 PM GMT)

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டு, ஆதார் அட்டையை தரையில் போட்டு கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்


திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டு, ஆதார் அட்டையை தரையில் போட்டு கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிப்படை வசதிகள்

திருவாரூர் மாவட்டம் மேல ராதநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட காவாலக்குடி கிராமத்தில் 55 -க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் பொதுக் கழிவறை கடந்த 20 ஆண்டுகளாக இல்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல முறை முறையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

இந்நிலையில் நேற்று அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி காவாலக்குடி கிராம மக்கள் திரண்டு மனு அளிக்க திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கிராம மக்கள் தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை தரையில் போட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக போராட்டத்தை தடுக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், உங்களது கோரிக்கை குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து தீர்வு காண வேண்டுமே தவிர போராட்டத்தில் ஈடுபடுவதை கைவிடுமாறு எச்சரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story