குடிநீர் வசதி செய்து தரக்கோரி தர்ணா போராட்டம்


குடிநீர் வசதி செய்து தரக்கோரி தர்ணா போராட்டம்
x

குடிநீர் வசதி செய்து தரக்கோரி அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா சனிக்கவாடி கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 3 குடும்பத்தினர் கடந்த 3 தலைமுறையாக வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதிக்கு இதுவரை குடிநீர் வசதி செய்து தராமல் உள்ளதாக கூறப்படுகிறது.

தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர்கள் தலித்விடுதலை இயக்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் என்.ஏ. கிச்சா, மாநில மகளிர் அணி தலைவி தலித்நதியா ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் போர்டிகோ முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து அவர்களிடம் கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமலை பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story