ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

திரண்டனர்

கடலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரின் (வளர்ச்சி) ஊழியர் விரோத போக்கை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

அதன்படி நேற்று கடலூர் மாவட்டம் முழுவதில் இருந்தும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள், மாநில பொதுச்செயலாளர் பாரி தலைமையில் மாவட்ட தலைவர் சண்முகசிகாமணி, மாவட்ட செயலாளர் கொளஞ்சி, மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒன்று திரண்டனர்.

தர்ணா போராட்டம்

பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலகத்திற்கு செல்ல முற்பட்டனர். அப்போது அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் தடுத்து, நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அவர்கள் அவரை தான் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, மாவட்ட கலெக்டர் மாலை 3 மணிக்கு பிறகு சந்திப்பதாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

பேச்சுவார்த்தை

பின்னர் மாலையில் மீண்டும் வந்து மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், இது பற்றி என்னுடைய கவனத்திற்கு கொண்டு வராமல் போராட்டம் நடத்துகிறீர்கள். இருப்பினும் இது பற்றி நேர்முக உதவியாளரை கண்டிப்பதாக தெரிவித்தார். இதை கேட்டதும் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story