சம்பளம் வழங்காததை கண்டித்து ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்


சம்பளம் வழங்காததை கண்டித்து ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x
ஈரோடு

சம்பளம் வழங்காததை கண்டித்து ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்கள் உள்ளன. 4-வது மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளுக்கு 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளனர். இதில் சுமார் 200 பேர் தற்காலிக பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த சில மாதங்களாக தாமதமாக சம்பளம் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் 4-வது மண்டலத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நேற்று காலை 4-வது மண்டல அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமதமாகும் சம்பளம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகராட்சி மண்டல கண்காணிப்பாளர் திருமலைசாமி, ஆய்வாளர்கள் நல்லசாமி, கதிரேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-

தூய்மை பணி, டிரைவர், மலேரியா தடுப்பு பணி உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறோம். எங்களுக்கு மாத கடைசி வேலை நாளில் சம்பளம் வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் மாதந்தோறும் 5-ந் தேதி தான் வழங்கப்படுகிறது. அதிலும் கடந்த சில மாதங்களாக தாமதமாக சம்பளம் வழங்கப்படுகிறது. மற்ற 3 மண்டல அலுவலகங்களிலும் சம்பளம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் 4-வது மண்டலத்தில் மட்டும் சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கு தாமதமின்றி சம்பளம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வங்கி கணக்கு

அதற்கு அதிகாரிகள், "வங்கிக்கு காசோலை வழங்கப்பட்டு விட்டது. எனவே தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்கில் விரைவில் செலுத்தப்படும்", என்றனர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். தூய்மை பணியாளர்களின் திடீர் போராட்டம் காரணமாக மாநகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story