கூடலூரில் ஒத்தையடி பாதையாக மாறிய தார்சாலை-கிராம மக்கள், மாணவர்கள் அவதி
ஒத்தையடி பாதை போல் 4-ம் நெம்பர் கிராமத்துக்கு செல்லும் தார் சாலை மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ- மாணவிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கூடலூர்
ஒத்தையடி பாதை போல் 4-ம் நெம்பர் கிராமத்துக்கு செல்லும் தார் சாலை மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ- மாணவிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
குண்டும் குழியுமான சாலை
கூடலூரில் இருந்து மேல் கூடலூர், கோக்கால் மலையடிவாரம் வழியாக 4-ம் நெம்பர், லாரஸ்டன் கிராமங்களுக்கு தார்சாலை செல்கிறது. இப்பகுதிக்கு செல்ல பஸ் வசதி கிடையாது. இதனால் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் தினமும் கூடலூர் வந்து செல்கின்றனர். பெரும்பாலும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் காலை. மாலை நேரத்தில் மாணவ மாணவிகள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கூடலூர்- 4-ம் நெம்பர் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக சாலை மிகவும் மோசமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
ஒத்தையடி பாதை போல்
இதேபோல் சாலையின் இருபுறமும் புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் ஒத்தையடி பாதை போல் மாறிவிட்டது. மேலும் கோக்கால் மலையடிவாரம் பகுதியில் சாலை இருப்பதால் காட்டு யானைகள், சிறுத்தை புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சில சமயங்களில் சாலையோர புதர்களுக்கு இடையே வனவிலங்குகள் நிற்பதால் ஆபத்தான முறையில் மாணவர்கள், கிராம மக்கள் நடந்து செல்கின்றனர்.
இதனால் குழந்தைகள் வீடு திரும்பும் வரை பெற்றோர் மன உளைச்சலில் உள்ளனர். சாலை மோசமாக உள்ளதால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் கிராமப்புற பகுதிக்கு வருவதில்லை. இதன் காரணமாக அவசர நேரத்தில் நோயாளிகள் கர்ப்பிணிகளை உரிய நேரத்தில் ஆஸ்பத்திரி கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக இருபுறமும் புதர்களை அகற்றி விட்டு பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிவரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.