டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்
தர்மபுரி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கடந்த 2008-ம் ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 1,230 உள் நோயாளிகளுக்கு படுக்கைகள் உள்ளன. இங்கு 16 அறுவை சிகிச்சை அரங்குகள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, டிஜிட்டல் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை, கண், மகப்பேறு, பல், இருதயம், நுரையீரல் என 27 துறைகள் உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு முதல் கண் வங்கியும் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
தற்போது ரூ.175 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தற்போது தர்மபுரி அரசு மருத்துவமனையில் சுமார் 55 சிறுநீரக கோளாறு உள்ள நோயாளிகள் சுழற்சி முறையில் ஒரு மாதத்திற்கு 500 சுழற்சிகள் விதம் டயாலிசிஸ் செய்து கொள்ளும் பிரிவு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மஞ்சள் காமாலை நோயாளிகளுக்கான பிரத்தியேகமான புதிய டயாலிசிஸ் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய டயாலிசிஸ் பிரிவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அமுதவல்லி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமணை கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் காந்தி, உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் சந்திரசேகர், மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் கலைச்செழியன் மற்றும் டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.