கோவில் முன் தேங்கும் கழிவு நீர்


கோவில் முன் தேங்கும் கழிவு நீர்
x

மடத்துக்குளம் அருகே கோவில் முன் உள்ள சாக்கடைக்கால்வாயில் தேங்கும் கழிவு நீரால் பக்தர்கள் அவதிப்படும் நிலை உள்ளது.

திருப்பூர்

போடிப்பட்டி,

மடத்துக்குளம் அருகே கோவில் முன் உள்ள சாக்கடைக்கால்வாயில் தேங்கும் கழிவு நீரால் பக்தர்கள் அவதிப்படும் நிலை உள்ளது.

துர்நாற்றம்

மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். விசேஷ நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் இங்கு வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கோவிலின் முன் உள்ள சாக்கடைக் கால்வாயில் அடிக்கடி கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது.மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது.இ துகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-

அருகிலுள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடைக் கால்வாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு அருகிலுள்ள மழைநீர் ஓடையில் கலக்கப்படுகிறது. கோவிலின் முன் மண் கால்வாயில் கழிவுநீர் கொண்டு செல்லப்படுவதால், களைகள் முளைத்து புதர் மண்டிக் காணப்படுகிறது. இதில் தேள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பதுங்கி பக்தர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.

அரசுப்பள்ளி

குறுகலான வழித்தடத்தில் பக்தர்கள் சாக்கடைக் கால்வாயைக் கடந்து கோவிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தடுமாறி சாக்கடையில் விழும் சூழல் உள்ளது. சாக்கடைக்கால்வாயில் அடிக்கடி கழிவுகள் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அமைதியான நிலையில் பக்தர்கள் வழிபாடு செய்ய முடியாத அளவிலும், பிரசாதங்களை சாப்பிட முடியாத நிலையிலும் கொசு மற்றும் ஈக்கள் தொல்லை தருகிறது.

இந்த பகுதிக்கு அருகில் அரசுப்பள்ளி அமைந்துள்ளது. மாணவர்களும் இந்த திறந்தநிலை சாக்கடைக் கால்வாயால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே புதிதாக மூடிய நிலையில் சாக்கடைக் கால்வாய் அமைத்து கழிவு நீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் கடந்து செல்லும் வகையில் வழித்தடம் அமைத்துத் தர வேண்டும்.

இவ்வாறு பக்தர்கள் கூறினர்.

1 More update

Next Story