எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தினாரா?-சேலத்தில் சசிகலா பரபரப்பு பேட்டி
எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தினாரா? என்பது குறித்து சேலத்தில் சசிகலா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
ஆத்தூர்:
சசிகலா ஆத்தூர் வருகை
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் சேலம் மாவட்டம், ஆத்தூருக்கு நேற்று மாலையில் வந்தார். பழைய பஸ் நிலையம் முன்பு வந்த அவருக்கு பட்டாசுகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் கூடி இருந்த கூட்டத்தினர் இடையே வேனில் இருந்தபடி சசிகலா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் உள்பட ஏராளமான நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர் வழியில் இந்த இயக்கத்தை கட்டிக்காத்து வழிநடத்தியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
தி.மு.க. அரசு முடக்க பார்க்கிறது
இந்தியாவில் எந்த முதல்-அமைச்சரும் கொண்டு வராத திட்டங்களான தொட்டில் குழந்தை திட்டம், அம்மா உணவகம், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார். இந்த இருபெரும் தலைவர்களும் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை தற்போதைய தி.மு.க. அரசு முடக்க பார்க்கிறது.
மேலும் விளம்பர அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்டி மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர சபதம் ஏற்று உழைப்பேன். அதற்காக கட்சியை ஒருங்கிணைத்து வெற்றி பெற வைக்க பாடுபடுவோம்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு கட்சி இரண்டாக பிளவுபட்டபோது கூட கட்சியை ஒன்று சேர்த்தது நான் தான். இன்றைய சூழ்நிலையில் கட்சியை ஒன்றிணைப்பது பெரிய விஷயம் அல்ல. நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக நடக்கும் என்று ஒற்றுமையுடன் பணியாற்றி மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவோம்.
இவ்வாறு சசிகலா பேசினார்.
முன்னதாக சேலம் மாவட்ட எல்லையான தலைவாசலுக்கு வந்த சசிகலாவுக்கு சாத்தப்பாடி சரவணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சசிகலா ஆத்தூர், வாழப்பாடி வழியாக நேற்று இரவு சேலத்துக்கு வந்தார்.
சேலத்தில் பேட்டி
தொடர்ந்து சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. கோட்டை தான் மேற்கு மண்டலம். பெங்களூருவில் இருந்து நான் வரும் போது அனைவரும் ஒன்றாகத்தான் இருந்தார்கள். அப்போது எல்லோரும் ஒற்றுமையாக இருந்து அ.தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்று சொன்னேன். இப்போதும் அதைத்தான் கூறுகிறேன்.
கோடநாடு வழக்கு
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவை அப்போது இருந்த அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனர். முதலில் விமர்சனம் செய்தனர். பிறகு ஏற்றுக்கொண்டனர். எனவே எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வது தான் தலைமைக்கு அழகு.
கோடநாடு கொலை வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மை மக்களுக்கு தெரியட்டும். இதில் எல்லோரும் அரசியல் செய்ய பார்த்தார்கள். அது நடக்கவில்லை.
தமிழகத்தில் தற்போது சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. அதன்பிறகு ஊழல் அதிகமாகிவிட்டது. யாரையும் தட்டி கேட்க முடியவில்லை.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தினாரா? என்பது மக்களுக்கு தெரியும். எனது சுற்றுப்பயணம் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். தற்போது தி.மு.க. அரசு மின்கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது சுமையை திணித்து உள்ளது. அதே போன்று மின்கட்டண உயர்வால் சிறு, குறு தொழில் உள்ளிட்ட அனைத்து தொழிலும் பாதிக்கும். இவ்வளவு மின்கட்டணம் உயர்த்தினால் எப்படி தொழில் செய்ய முடியும்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். அதற்கு உண்டான வேலைகளை செய்து வருகிறேன். தி.மு.க. ஆட்சி மீது மக்கள் வெறுத்து போய் உள்ளனர். எனவே அ.தி.மு.க.விற்கு வருகிற தேர்தலில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ரவிக்குமாா, சித்தானந்தம், சந்திரன், அர்ச்சுணன், நவின்குமார், உதயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.