ஜமேஷா முபின், பிரத்யேக செயலி மூலம் வெளிநாட்டு நபர்களுடன் பேசினாரா?


ஜமேஷா முபின், பிரத்யேக செயலி மூலம் வெளிநாட்டு நபர்களுடன் பேசினாரா?
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின், பிரத்யேக செயலியை பயன்படுத்தி வெளிநாட்டு நபர்களுடன் பேசினாரா? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோயம்புத்தூர்


கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின், பிரத்யேக செயலியை பயன்படுத்தி வெளிநாட்டு நபர்களுடன் பேசினாரா? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கார் வெடிப்பு சம்பவம்

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி அதிகாலையில் கார் வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, அங்கிருந்த 70 கிலோ வெடி பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே பலியான ஜமேஷா முபின் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

பிரத்யேக செயலி

கடந்த 2019-ம் ஆண்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஜமேஷா முபினிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை விடுவித்ததுடன், அவரின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க உளவுத்துறைக்கு அறிவுறுத்தினர். இதனால் அவரை உளவுத்துறையினர் கண்காணித்து வந்தனர். அதன் பிறகு பலமுறை ஜமேஷா முபின் தனது வீட்டை மாற்றி உள்ளார்.

அவருடைய செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் தனது நண்பர்களுடன் பேச பிரத்யேக செயலியை (ஐ.எம்.ஓ.) பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செயலியில் வீடியோ, ஆடியோ மூலம் பேசலாம். அத்துடன் குறுஞ்செய்திகளையும் அனுப்பலாம்.

வெளிநாட்டு நபர்கள்

இதில் குறுஞ்செய்திகளை அனுப்பினால் கண்டுபிடித்து விடலாம். ஆனால் வீடியோ மற்றும் ஆடியோ மூலம் பேசினால் எளிதில் கண்டுபிடிக்கவே முடியாது. எனவே அவர் இந்த செயலி மூலம்தான் தனது நண்பர்களுடன் பேசி வந்து உள்ளார். பேசி முடித்ததும் அதை அழித்தும் இருக்கிறார்.

சிம்கார்டு, வாட்ஸ்-அப், முகநூல் ஆகியவை மூலம் பேசினால் எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஆனால் இதுபோன்ற பிரத்யேக செயலி மூலம் பேசினால் கண்டுபிடிக்க முடியாது என்பதால் அவர் இந்த செயலியை பயன்படுத்தி வந்தது தெரியவந்து உள்ளது. மேலும் இந்த செயலி மூலம் அவர் வெளிநாட்டை சேர்ந்த நபர்களுடன் பேசி இருக்க வாய்ப்பு உள்ளது.

அடிக்கடி பேசி உள்ளார்

எனவே இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த செயலியில் சிலருடன் ஜமேஷா முபின் அடிக்கடி பேசி வந்து உள்ளார். அந்த நபர்களுடன் வாட்ஸ்-அப் மற்றும் செல்போன் மூலம் பேசவில்லை. எனவே அவர்களிடம் விசாரணை நடத்தினால், எந்த நாட்டை சேர்ந்த நபர்களுடன் ஜமேஷா முபின் தொடர்பு வைத்து இருந்தார் என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

எளிதில் கண்டுபிடிக்க முடியாது

இந்த பிரத்யேக செயலி குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

வாட்ஸ்-அப், சிம்கார்டுகளை உபயோகித்து பேசினால், அந்த நபர் யார்? யாரிடம் பேசி உள்ளார் என்பதை மிக துல்லியமாக கண்டுபிடித்து விடலாம். ஆனால் இதுபோன்ற பிரத்யேக செயலி மூலம் பேசி, அவற்றை அழித்து விட்டால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இருதரப்பினரின் ரகசியம் காக்கப்படும் என்பதால்தான் பலர் இதுபோன்ற செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.

பிரச்சினை ஏற்படும்போது இந்த செயலியின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் கேட்டாலும் எளிதில் கொடுப்பது இல்லை. எனவேதான் இந்த செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story