திருச்சி ரவுடியை கொலை செய்தது கூலிப்படையினர்?


திருச்சி ரவுடியை கொலை செய்தது கூலிப்படையினர்?
x

திருச்சி ரவுடி கொலையில் தொடர்புடையவர்கள் கூலிப்படையினராக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

ரவுடி கொலை சம்பவம்

திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்தவர் இளவரசன் (வயது 31). பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த 12-ந் தேதி புதுக்கோட்டையில் ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் கோா்ட்டில் கையெழுத்திட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற போது புதுக்குளம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் விசாரிக்கின்றனர். இதில் சந்தேகப்படும்படி 3 பேர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இதில் எவ்வித துப்பும் துலங்கவில்லை எனக்கூறப்படுகிறது.

முககவசம்

இதற்கிடையில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி மூலம் விசாரித்ததில் கொலையாளிகள் 5 பேர் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தது தெரிந்தது. இதில் அவர்கள் முகம் தெரியாமல் இருக்க முககவசம் அணிந்திருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களை அடையாளம் காணுவதில் போலீசாருக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் மோட்டார் சைக்கிள்களின் வாகனப்பதிவு எண் மூலம் விசாரிக்கின்றனர். இதேபோல நகரில் முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிடுகின்றனர். செல்போன் சிக்னல் டவரில் பதிவான அழைப்புகளை வைத்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

கூலிப்படை

கொலையாளிகள் கூலிப்படையினரை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. இதனால் இக்கொலையில் ஈடுபட்டவர்களை இயக்கியவர்கள் யார்? எனவும் ஒருபுறமும் விசாரிக்கின்றனர். தொடர்ந்து தீவிர புலன்விசாரணை நடைபெறுவதாகவும், விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story