கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் தவறான தகவல் அளித்தாரா?-போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் தவறான தகவல் அளித்தாரா?-போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
x

தவறான தகவல் அளித்தது பற்றி கோர்ட்டு உத்தரவின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் உரிய விளக்கம் அளிக்காதது ஏன்? என்று மாநகர போலீஸ் கமிஷனர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

கஞ்சா வழக்கில் தண்டனை

மதுரை கீரைத்துறை பகுதியில் கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் கோரி குமாரவேல், ஜெயமாரி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கில் கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், குமாரவேல் மீது ஏற்கனவே 4 வழக்குகள் உள்ளது. ஜெயமாரி மீது வெடிகுண்டு வழக்கு உள்ளிட்டவை நிலுவையில் உள்ளதாலும் அவர்கள் இதே கோரிக்கைக்காக ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. அவர்கள் மீண்டும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர் என இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.

தவறான தகவல்

ஆனால், குமாரவேல் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த கோர்ட்டுக்கு தவறான தகவலை இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

எனவே இது சம்பந்தமாக அவர் இந்த கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் அவர் விளக்கம் அளிக்கவில்லை. எனவே, கோர்ட்டு உத்தரவை இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் நிறைவேற்றாதது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை வருகிற 31-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Next Story