மாணவர் 'மனசு பெட்டி'... மனம் திறக்க வைத்ததா?


மாணவர் மனசு பெட்டி... மனம் திறக்க வைத்ததா?
x
தினத்தந்தி 28 Oct 2022 12:30 AM IST (Updated: 28 Oct 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 2019-ம் ஆண்டு பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்றில், தீர்ப்பு வழங்கிய மகிளா கோர்ட்டு நீதிபதி சில கருத்துகளை முன்வைத்தார். அதில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

பெரம்பலூர்

மாணவர் மனசு பெட்டி

அதனை செயல்படுத்தும் விதமாகவும், சமீபத்தில் பள்ளி மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் விதமாகவும் பள்ளிக் கல்வித்துறை கொண்டு வந்ததுதான் இந்த 'மாணவர் மனசு பெட்டி'. அதுமட்டுமல்ல, பள்ளிகளில் உள்ள நிறைகுறைகள், கல்விப்பாதையில் மாணவ-மாணவிகளின் மனதில் உள்ள எண்ணங்கள், தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் இது ஏற்படுத்தப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 214 அரசு இடைநிலைப்பள்ளிகள், 6 ஆயிரத்து 177 மேல்நிலைப்பள்ளிகளில் இந்த பெட்டியை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.1,000 நிதியையும் கல்வித்துறை ஒதுக்கியது.

உடனுக்குடன் தீர்வு

அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் இந்த 'மாணவர் மனசு பெட்டி' தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் புகார் தெரிவிக்கும் மாணவ-மாணவிகளின் புகார்களை கண்காணிக்க தலைமை ஆசிரியர் தலைமையில், 2 ஆசிரியர்கள், ஒரு பெற்றோர், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாக பணியாளர், வெளி உறுப்பினர் கொண்ட பாதுகாப்பு ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு 'மாணவர் மனசு பெட்டி'யில் விழும் புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ பிரித்து பார்த்து, அதில் மாணவ-மாணவிகள் தெரிவித்து இருப்பதை பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணுகின்றனர். சிறிய புகாரைக்கூட தட்டிக்கழிக்காமல் அனைத்தையும் சரி செய்கின்றனர்.

என்ன மாதிரியான புகார்கள்?

பெரும்பாலும் பள்ளி அளவில் நிவர்த்தி செய்யப்படக்கூடிய புகார்களைதான் மாணவ-மாணவிகள் அதிகம் தெரிவிப்பதாகவும், அதனை ஓரிரு நாட்களில் சரிசெய்து விடுவதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவிக்கிறது. அந்தவகையில், ஆசிரியர்கள் வீட்டு பாடம் அதிகம் கொடுக்கிறார்கள். அதை குறைத்து கொடுக்க சொல்லுங்கள்.... வகுப்பு தலைவன் என்னை அதிகம் திட்டுகிறான்... வகுப்பறையில் மின் விசிறி சரியாக சுழலுவதில்லை... உடற்கல்வி பாடவேளையில் வேறு வகுப்பு ஆசிரியர் பாடம் எடுப்பதை தவிர்க்கவேண்டும்... என்பது போன்ற வகுப்பறை சார்ந்த புகார்கள்தான் பெருமளவில் இடம்பெறுகின்றன.

இதுதவிர வகுப்பறையில் சில மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள்... தவறான வார்த்தைகளை சிலர் பேசுகிறார்கள்... ஒழுங்கீனமாக சில மாணவர்கள் நடக்கிறார்கள்... என்பது போன்ற நல்ல நோக்கத்துடனும் அவ்வாறு ஈடுபடுபவர்களின் பெயர்களை குறிப்பிட்டு புகார்களையும், பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது... கழிவறை கதவு உடைந்துள்ளது... குடிநீர் வசதி குறைவாக இருக்கிறது... செடிக்கு தண்ணீர் ஊற்றாமல் இருக்கிறது... என்பது போன்ற பொதுநல புகார்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

'சானிட்டரி நாப்கின்' வையுங்கள்...

மேலும், வீட்டில் சொல்ல முடியாத சிலவற்றையும் மாணவ-மாணவிகள் மனம் திறந்து பெயருடன் குறிப்பிட்டு இந்த பெட்டியில் கடிதமாக எழுதி போடுகிறார்கள். சிலர் நேரடியாக ஆசிரியர்களிடமும் தெரிவிக்கிறார்கள். அந்த மாணவர்களை அழைத்து பேசுவதோடு, சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரிடம் முறைப்படி ஆசிரியர்கள் எடுத்துக்கூறுகின்றனர்.அதுமட்டுமல்லாமல், என்னுடைய நண்பர் கடந்த சில நாட்களாக சரியாக பேசவில்லை. உடனே அழைத்து என்னிடம் பேச வையுங்கள், கல்வி சுற்றுலா அழைத்து செல்லுங்கள், சமையல் போட்டி நடத்துங்கள், ஓடி விளையாட அனுமதியுங்கள், பள்ளியில் 'சானிட்டரி நாப்கின்' எந்திரம் வையுங்கள் போன்றவையும் இந்த புகார் பெட்டியில் புகார்களாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நோக்கம் நிறைவேறி இருக்கிறதா?

என்னதான் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டாலும், அதில் சில முகம் சுழிக்க வைக்கும் சம்பவங்கள் நிகழாமல் இருக்காது. அதன்படி, சமீபத்தில் ஒரு பள்ளியில் மாணவர் மனசு பெட்டியில் பெயர் குறிப்பிடாமல் காதல் கடிதம் போடப்பட்ட தகவல்களும் வெளியாகின.

எந்த நோக்கத்துக்காக இந்த 'மாணவர் மனசு பெட்டி' திட்டம் கொண்டு வரப்பட்டதோ? அது நிறைவேறி இருக்கிறதா? என்பது தொடர்பாக பள்ளி மாணவ-மாணவிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

பிரச்சினை குறைந்துள்ளது

பெரம்பலூர் அரசு பள்ளி மாணவர் சிவராஜ்:- தற்போது பள்ளிகளில் மாணவர் மனசு பெட்டி இருப்பதால் மாணவ-மாணவிகளுக்கு படிப்பின் போது ஏற்படும் பிரச்சினைகள் குறைந்து வருகிறது. மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் சிறிய பிரச்சினைகளை கூட புகாராக எழுதி பெட்டியில் போட்டு விடுகின்றனர். இதனால் மாணவ-மாணவிகளிடம் தவறு செய்யும் நோக்கத்துடன் பழகுபவர்கள் பயப்படுகிறார்கள்.

நடவடிக்கை

அரசு பள்ளி மாணவி பிரியதர்ஷினி:- பள்ளிகளில் மாணவர் மனசு பெட்டி பள்ளி மாணவிகளில் பெரும்பாலானோர் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை பெற்றோர், ஆசிரியர்களிடம் நேரில் கூறுவதற்கு பயப்பட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் தற்போது பள்ளிகளில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளதால் மாணவிகள் தங்களுக்கு பள்ளிகளில், பொது இடங்களில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால், அதனை புகாராக எழுதி போட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது எளிதில் நடவடிக்கை எடுக்க முடியும்.

வரவேற்பு

பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் பல்கீஸ் பேகம்:- பள்ளிகளில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் இடையூறுகள் களையப்பட்டு வருகிறது. தற்போது மாணவ-மாணவிகள் எந்தவொரு பிரச்சினையின்றி கல்வி கற்று வருகின்றனர்.

பெற்றோர் கருத்து

பெரம்பலூரை சேர்ந்த ஒரு மாணவியின் தந்தை ஜோதிவேல்:- பள்ளிகளில் மாணவர் மனசு பெட்டி மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட குற்ற வழக்குகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகளில் அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அச்சமில்லை

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர்:- எனது அறைக்கு அருகே மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை வெளியே கூறக்கூடிய அளவுக்கு எனது பள்ளியில் பெரிய புகார்கள் எதுவும் வரவில்லை. மாணவர் மனசு பெட்டி இருப்பதால் மாணவ-மாணவிகள் பள்ளியில் எவ்வித இடையூறுமின்றியும், அச்சமின்றியும் படிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story