ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி இறந்தார்.
விவசாயி
ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி கிராமம் மல்லூரார் தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 83). விவசாயி. இவர் நேற்று அவரது கிணற்றில் துணி துவைத்து விட்டு மின்மோட்டாரை இயக்கி உள்ளார். பிறகு அவர் தண்ணீர் வரும் ரப்பர் குழாயை பிடித்து கொண்டு கிணற்றை எட்டி பார்த்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அந்த கிணற்றில் 70 அடி ஆழத்துக்கு மேல் தண்ணீர் இருந்தது. சிறிது நேரத்தில் முத்துசாமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனை
இதுபற்றி தகவல் அறிந்த ராசிபுரம் தீயணைப்பு படையினர் நிலைய அதிகாரி ஏழுமலை தலைமையில் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி கயிறு மூலம் தண்ணீரில் மூழ்கி இறந்த முத்துசாமியின் உடலை கைப்பற்றி மேலே கொண்டு வந்தனர். இறந்த முத்துசாமிக்கு விஜயா (48) என்ற மகள் உள்ளார்.
இதுகுறித்து ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.