ராசிபுரம் அருகே தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து பெண் பலி
ராசிபுரம் அருகே தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து பெண் பலி
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து பெண் பலியானார்.
5-வது வார்டு உறுப்பினர்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே நாரைக்கிணறு ஊராட்சிக்குட்பட்ட பெரிய கிணறு பகுதியில் 5-வது வார்டு உறுப்பினர் ரம்யாவின் கணவர் முருகன் அப்பகுதி மக்களின் வசதிக்காக சொந்த செலவில் சில தினங்களுக்கு முன்பு 7.8 அடி உயரமுள்ள தண்ணீர் தொட்டி ஒன்றை கட்டினார். தண்ணீர் தொட்டி பணிகள் முழுமை அடையாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான அனுமதியை ரம்யாவின் கணவர் ஊராட்சி நிர்வாகத்திடம் இருந்து பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நாரைக்கிணறு ஊராட்சி சார்பில் நடந்து வரும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நாரைகிணறு அருகே உள்ள செலம்பன்காடு தோட்டத்தை சேர்ந்த செலம்பன் மனைவி பாப்பாத்தி (வயது 55) மற்றும் சுப்புலட்சுமி உள்பட சிலர் பணிகளை செய்து கொண்டிருந்தனர்.
தொட்டி இடிந்து விழுந்தது
இந்த நிலையில் பணிகள் முழுமை பெறாத நிலையில் இருந்து வந்த புதிய தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடிப்பதற்காக அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த பாப்பாத்தி சென்றார். அப்போது தொட்டியில் தண்ணீரை நிரப்பியதாக தெரிகிறது. இதனால் அழுத்தம் தாங்காமல் திடீரென புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது. இதில் தண்ணீர் பிடிக்க சென்ற பாப்பாத்தி இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சுப்புலட்சுமி லேசான காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அனுமதி பெறவில்லை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் இறந்த பாப்பாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே 5-வது வார்டு உறுப்பினர் ரம்யாவின் கணவர் முருகன் ஊராட்சி நிர்வாகத்திடம் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் அவரது சொந்த விருப்பத்தின் பேரில் தண்ணீர் தொட்டி கட்டி கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கோரிக்கை
இறந்த பாப்பாத்திக்கு கணேசன் என்ற மகனும், கனகவல்லி (39), கவிதா (35) என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்ட பாப்பாத்தியின் உறவினர்கள் இறப்புக்கு காரணமானவர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாவின் கணவர் முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.