கணவன் கண் எதிரே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி பாண்டமங்கலம் அருகே சோகம்
கணவன் கண் எதிரே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி பாண்டமங்கலம் அருகே சோகம்
பரமத்திவேலூர்:
பாண்டமங்கலம் அருகே கணவன் கண் எதிரே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஷேச நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 37). சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி செல்வராணி (25). இவர் அண்ணா நகரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு தருண்வேல் (6), சிவயோகன் (1½) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் மோட்டார்சைக்கிளில் நெட்டையாம்பாளையத்தில் உள்ள செல்வராணியின் சித்திவீட்டில் நடைபெற்ற ஒரு விஷேச நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
தவறி விழுந்தார்
அப்போது நெட்டையாம்பாளையம் பிரிவு சாலை அருகே சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது. இதனால் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த செல்வராணி தவறி சாலையில் விழுந்தார்.
இதில் தலையின் பின்புறம் பலத்த காயம் அடைந்த செல்வராணி உயிருக்கு போராடினார். தனது கண் எதிரே மனைவி உயிருக்கு போராடியதை பார்த்த வெங்கடேஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றார்.
விசாரணை
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வராணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன் கண் எதிரே தவறி விழுந்து படுகாயம் அடைந்து மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.