தோசை சுட்டு தராததால் ஆத்திரம்்கத்தியால் வெட்டியதில் படுகாயம் அடைந்த பெண் சாவு ; கொலை வழக்காக மாற்றி விசாரணை
மத்தூர்:
மத்தூர் அருகே தோசை சுட்டு தராததால் ஆத்திரம் அடைந்த கணவன் கத்தியால் வெட்டியதில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தோசை கேட்டு தகராறு
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே என்.மோட்டூர் மேட்டு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மாதம்மாள் (50). கடந்த 11-ந் தேதி கணேசன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து தனக்கு தோசை சுட்டு தரும்படி மனைவியிடம் கேட்டார். இதையடுத்து மாதம்மாள் 3 தோசைகள் சுட்டு கொடுத்தார்.
பின்னர் கியாஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டது. இதற்கிடையே கணேசன் தனக்கு மேலும் 3 தோசைகள் வேண்டும் என்று கேட்டார். அதற்கு மாதம்மாள் கியாஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டதாகவும், இனிமேல் தோசை சுட்டு தர முடியாது என கூறினார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் ஆத்திரம் அடைந்த கணேசன், மாதம்மாளின் தலை, கையில் கத்தியால் வெட்டினார்.
கொலை வழக்கு
இதை தடுக்க சென்ற மருமகள் விஜயலட்சுமி, குழந்தை தனிஷா (2) ஆகியோரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதம்மாள் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.