கந்திகுப்பம் அருகேகார் கவிழ்ந்து ஐ.டி. நிறுவன ஊழியர் பலி
பர்கூர்:
கந்திகுப்பம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர் பலியானார்.
ஐ.டி. ஊழியர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவா (வயது 33). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவா தனது மனைவி, குழந்தையுடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று சிவா காரில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி அருகே கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விசாரணை
இதில் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்த சிவாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.