ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதேனி ராணுவ மேஜர் உடல் 24 குண்டுகள் முழங்க தகனம்:அமைச்சர் இ.பெரியசாமி அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தேனி ராணுவ மேஜரின் உடல், 24 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. அமைச்சர் இ.பெரியசாமி அஞ்சலி செலுத்தினார்.
ஹெலிகாப்டர் விபத்து
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று கடந்த 16-ந்தேதி அருணாசல பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெயந்த் ஆகிய 2 ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் (வயது 32) என்பவர் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். அவருடைய தந்தை பெயர் ஆறுமுகம். தாயார் மல்லிகா. ஜெயந்துக்கு திருமணமாகி செல்லா சாரதா என்ற மனைவி உள்ளார்.
அமைச்சர் அஞ்சலி
இதனிடையே உயிரிழந்த லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டியின் உடல் ஐதராபாத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேஜர் ஜெயந்தின் உடல் விமானப்படை விமானம் மூலம் நேற்று முன்தினம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று அவருடைய உடல் ஜெயமங்கலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்குள்ள கலையரங்கம் அருகில் அவருடைய உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் மேஜர் ஜெயந்த் உடலுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஜெயந்த் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். தொடர்ந்து தமிழக அரசின் கார்கில் பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிவாரண நிதிக்கான உத்தரவை ஜெயந்தின் மனைவி செல்லா சாரதாவிடம், அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.
கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள்
இதைத்தொடர்ந்து ஜெயந்த் உடலுக்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அதுபோல் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராஜபாண்டியன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், உறவினர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம்
ஜெயந்தின் தந்தை ஆறுமுகம் தனது மகன் உடலுக்கு சல்யூட் அடித்து வீரவணக்கம் செலுத்தினார். தாயார் மல்லிகா, மனைவி செல்லா சாரதா ஆகியோர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். இறுதியாக முப்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவருடைய உடல், அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் அமைச்சர் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் மற்றும் அதிகாரிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடந்து சென்றனர்.
24 குண்டுகள் முழங்க...
ஊரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள மயானத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. பின்னர் ஜெயந்த் உடலில் போர்த்தப்பட்ட தேசியகொடியை அவருடைய மனைவியிடம் ராணுவ அதிகாரிகள் கொடுத்தனர்.
அதையடுத்து 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவருடைய தந்தை ஆறுமுகம் தீ மூட்டினார். இந்த சம்பவத்தால் ஜெயமங்கலம் கிராமமே சோகமயமாக காணப்பட்டது.








