ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்வயர் திருட்டு
தலைவாசல் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்வயர் திருட்டு போனது.
தலைவாசல்:-
தலைவாசல் அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்வயர் திருட்டு போனது.
மின்வயர் திருட்டு
தலைவாசல் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேவியாக்குறிச்சி மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. தலைவாசல் அடுத்து சம்பேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான சேகோ ஆலை வளாகத்தில் தேவியாக்குறிச்சி மின்சார பிரிவுக்கு சொந்தமான உயர் அழுத்த மின் பாதைக்கு பயன்படுத்தப்படும் மின்சார வயர்கள் வைக்கப்பட்டு உள்ளன. அங்கே 6 ரோல் உயர் மின்னழுத்த வயர்களை அந்த பகுதியில் வேலை செய்வதற்காக வைத்திருந்ததனர்.
இந்த நிலையில் நேற்று காலை சேகோ ஆலை உரிமையாளர் ராமமூர்த்தி ஆலைக்கு சென்றார். அங்கு வைத்திருந்த 6 ரோல் மின்சார வயரில் 4 ரோல் மின்சார வயர்கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தேவியாக்குறிச்சி மின்சார பிரிவு உதவி பொறியாளர் சுப்பிரமணி, செயற்பொறியாளர் முருகன், வயர்மேன் முருகேசன் ஆகியோர் அங்கு நேரில் வந்து பார்வையிட்டனர்.
தேவியாக்குறிச்சி மின்சார பிரிவு உதவி செயற்பொறியாளர் முருகன், தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் உயர் அழுத்த மின்பாதைக்கு பயன்படுத்தும் 4 டன் எடையுடைய ரூ.8 லட்சம் மதிப்பிலான மின்சார வயர்கள் திருட்டு போனதாக குறிப்பிட்டு இருந்தனர். சம்பவ இடத்தை தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்சார வயர்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
4-வது முறையாக...
கடந்த ஒரு ஆண்டில் இந்த பகுதியில் இதுபோன்ற மின்சார வயர்கள் திருட்டு சம்பவம் 4-வது முறையாக நடந்துள்ளது. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமரா செயல்படாத நிலையில் இருப்பதால் இந்த திருட்டை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். எனவே இந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா செயல்படுவதை உறுதி செய்வதுடன் தொடர் திருட்டுகளை தடுக்க போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், மின்வாரிய அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.