மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்
ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டதால் மின் கட்டணம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. .
ஆதார் கார்டு என்பது நாட்டு மக்களின் அடையாளமாக மட்டுமின்றி அரசு திட்டங்கள், மானியங்களில் முறைகேடுகளைத் தடுக்கும் ஆயுதமாகவும் மாறி இருக்கிறது.
சமையல் கியாஸ் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமானவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.
இணைப்பது கட்டாயம்
தற்போது வங்கிக் கணக்கு எண், வருமான வரிக் கணக்கு எண், வருங்கால வைப்பு நிதி எண், வாக்காளர் அடையாள அட்டை எண் வரிசையில், தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணுடனும் ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாய மாக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி இனி மின்சாரக் கட்டணம் செலுத்தகிறவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் எண்ணை இணையத்தளத்தின் வழியாக இணைப்பது அவசியமாகிறது.
ஏற்கனவே 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இதுபற்றி மக்கள் கருத்தை அறிய முயன்றபோது பெரும்பாலானோர் 'அப்படியா? எங்களுக்கு ஒன்றும் தெரியாதே...யாரும் சொல்லலேயே..!' என்று அப்பாவித்தனமாகக் கேட்டனர்.
அமைச்சர் விளக்கம்
தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tnebltd.gov.in/adharupload இணைய வழி மூலம் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின்சார கட்டணத்தைக் கட்ட முடியும் என்று கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இணைப்பு 100 யூனிட் இலவச மின்சாரத்தை பறிக்கும் முயற்சியா? என்று வீட்டு வாடகைத்தாரர்களின் மத்தியில் அச்சம் எழுந்த வேளையில், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ' ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தாலும் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று பரப்பப்படுவது வெறும் வதந்தி' என்று விளக்கம் அளித்தார்.
எனினும் மக்கள் மத்தியில் குழப்பமும், அச்சமும் தொடர்ந்து வரும் வேளையில், 'ஆன்லைன்' மூலம் ஆதார் எண்ணை இணைப்பதிலும் அவ்வப்போது தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டு மின்நுகர்வோர்களை பரிதவிக்கவிட்டு வருகிறது.
மின் இணைப்புடன் ஆதார் விவரங்களை இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியது குறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
ஏமாற்றத்துடன்...
திண்டுக்கல்லை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சகாயராஜ்:- மின் இணைப்புக்கான கட்டணத்தை செலுத்துவதற்காக நத்தம் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு வந்தேன். ஆனால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்று கூறிவிட்டனர்.
எனக்கு எப்படி ஆதார் விவரங்களை இணைப்பது என்று தெரியவில்லை என கேட்ட போது அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது தனியார் இணையதள சேவை மையங்களில் பதிவு செய்துவிட்டு வருமாறு தெரிவித்தனர். வேலைக்கு செல்ல வேண்டி இருப்பதால் நாளை (அதாவது இன்று) இணையதள சேவை மையத்துக்கு சென்று ஆதார் விவரங்களை பதிவு செய்ய முடிவு செய்துள்ளேன். என்னை போல் நிறைய தொழிலாளர்கள் மின்கட்டணத்தை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்
பழனியை சேர்ந்த தொழிலாளி சாகுல்:- இணையதளத்தை பயன்படுத்த தெரியாதவர்கள் ஆதார் விவரங்களை மின் இணைப்பு எண்ணோடு இணைப்பதற்கு சிரமப்படுவார்கள். எனவே மின்வாரிய அலுவலகத்திலேயே அதற்காக தனியாக சேவை மையங்களை தொடங்கலாம். ரேஷன் கடை, வங்கிகளில் கூட அவர்களே எங்களிடம் ஆதார் விவரங்களை பெற்று இணைத்துவிட்டனர்.
ஆனால் மின்வாரிய அலுவலகத்தில் இணையதள சேவை மையங்களுக்கு சென்று பதிவு செய்யுமாறு கூறுகின்றனர். இது எங்களை போன்ற வயதானவர்களுக்கு கூடுதல் அலைச்சலை ஏற்படுத்துவதுடன் ஆதார் விவரங்களை இணைப்பதற்காக கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டி உள்ளது.
மின் இணைப்பு துண்டிக்கும் நிலை
கொசவபட்டியை சேர்ந்த அந்தோணி:- மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைப்பு என்பது அவசரகதியாக நடைபெறுவது போல உள்ளது. இதுகுறித்து கிராமப்புற மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. ஆனால் இந்த மாதமே ஆதார் எண் விவரங்களை இணைக்காதவர்கள் மின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.
இதனால் அவர்களுக்கான வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், வீடுகளுக்கான 100 யூனிட் மின்சார மானியம் உள்ளிட்ட எந்த ஒரு மானிய திட்டமும் நிறுத்தப்படாது என்று உறுதியான தகவலை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் மக்களின் அச்சம் நீங்கும்.
சாணார்பட்டியை அடுத்த ஜோத்தாம்பட்டியை சேர்ந்த விவசாயி சிவா:- அரசின் திட்டங்கள் சரியான நபர்களை சென்றடைய வேண்டும் என்றால் அதற்கான புள்ளி விவரங்கள் அவசியம்.
இதற்காக தான் ஆதார் எண் விவரங்கள் வங்கி கணக்கு மற்றும் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. இப்படி ஒவ்வொரு துறையின் பயனாளர்கள் குறித்த துல்லியமான தகவல்கள் அரசிடம் இருப்பது அவசியம். அப்போது தான் போலிகள் ஒழிக்கப்பட்டு மக்களின் வரிப்பணம் களவாடப்படுவது தடுக்கப்படும். எனவே இந்த மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் விவரங்கள் இணைப்பு வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.